வங்கிச் சேவைகள் மற்றும் வருமான வரித் தாக்கல் போன்ற முக்கியத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் பான் கார்டை, ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஒருவேளை நீங்கள் இணைக்கத் தவறினால், ஜனவரி 1 முதல் உங்கள் பான் கார்டு செல்லாததாகிவிடும்.
இதனால் உங்களால் வங்கிப் பரிவர்த்தனைகள் செய்யவோ, வரி ரீஃபண்ட் பெறவோ முடியாது. பெயர், பிறந்த தேதி அல்லது பாலினம் போன்றவற்றில் உள்ள சிறு பிழைகளால் ஆன்லைனில் இணைக்க முடியாவிட்டால், வருமான வரித் துறையின் இணையதளத்திலோ அல்லது ‘யுடிஐ’ மையங்கள் வாயிலாகவோ திருத்தங்களை முதலில் மேற்கொள்ள வேண்டும். ஆன்லைனில் இணைக்க முடியாதவர்கள் அருகிலுள்ள பான் சேவை மையங்களுக்குச் சென்று 50 ரூபாய் கட்டணம் செலுத்தி பயோமெட்ரிக் முறையில் விவரங்களைப் புதுப்பிக்கலாம்.
பின்னர், வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (incometax.gov.in) ஆதார் மற்றும் பான் எண்களை உள்ளிட்டு, மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி (OTP) மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். தற்போதே இணைக்கத் தவறினால், அடுத்த ஆண்டு முதல் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க உடனே இந்த நடைமுறையை முடிப்பது அவசியமாகும்.
