காஞ்சிபுரம் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த லிங்கேஷ் (41) என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது உடைய சுமித்ரா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ள நிலையில் லிங்கேஷ் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றார். குடும்பத்தின் செலவுக்காக லிங்கேஷ் தன்னுடைய நண்பனான சுரேஷ் என்பவரிடம் 34,000 கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் திரும்ப கொடுக்காததால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது.
இதனால் லிங்கேஷ் ஏற்கனவே அடமானம் வைத்த தன்னுடைய மனைவியின் நகையை மீட்டு அதை விற்று கடனை செலுத்த முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து லிங்கேஷ் வீட்டுக்கு வந்த சுரேஷ் அவருடைய வாகனத்தில் லிங்கேஷை அழைத்துச் சென்றுள்ளார். பிறகு இருவரும் சென்று அடகு வைத்த நகையை மீட்டுள்ளனர். அப்போது பொன்னேரி கரை அருகே ஜே.ஜே.நகர் பகுதியில் லிங்கேஷுடன் தனது நண்பர்களான சுரேஷ், ரவுடி சரத், சம்பத், தசரதன் ஆகிய நான்கு பேருடன் பேசிக்கொண்டிருந்தார். லிங்கேஷ் தனது உறவினரான ராமமூர்த்தி என்பவரை அங்கு வரவழைத்து அவரிடம் நகையை விற்று பணத்தை எடுத்து வரும் படி கூறி இருக்கிறார்.
நகையை விற்கச் சென்ற ராமமூர்த்தி திரும்பி வருவதற்கு தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த சுரேஸ் உள்ளிட்ட நான்கு பேரும் லிங்கேஷை தாக்கி அவரது கழுத்து மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த லிங்கேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
