தூத்துக்குடி விமான நிலையத்தில் திரைப்பட நடிகரும் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்று கேட்கிறீர்கள். நான் போட்டியிடுவதை விட என்னுடன் பயணித்தவர்கள் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என நினைக்கின்றேன். முந்தைய ஆட்சியின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தற்போது 125 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் எந்த ஒரு நல்ல திட்டங்களையும் திமுக வரவேற்பது கிடையாது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் போதையின் போது நிகழ்கின்றன. போதை கலாச்சாரம் தற்போது அதிகரித்துவிட்டது. விஜய் முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ளார். முதலில் அவர் களத்தில் போட்டியிட வேண்டும். அவருடைய கொள்கை கோட்பாட்டை தெளிவு படுத்தாமல் தனிநபரை தாக்கி பேசுகின்றார். அவருடைய கட்சியை அரசியல் கட்சியாக நான் பார்க்கவில்லை. தேர்தலை சந்தித்த பிறகு தான் உண்மை நிலவரம் தெரியவரும்.
தேர்தலுக்குப் பின்னர் அந்த கட்சி இருக்குமா இல்லையா என்பது சந்தேகம்தான். தூத்துக்குடி தமிழக வெற்றி கழகம் நிர்வாகி அஜிதா ஆக்னல் நியாயம் கேட்டு விஜய்யின் வாகனம் முன்னால் போராட்டம் நடத்தினார். விஜய் தன்னுடைய காரை விட்டு இறங்கிச் சென்று அவரிடம் குறைகளை கேட்டிருக்கலாம். இனி நடிக்க மாட்டேன் என்று விஜய் கூறுவது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கும் என்று சரத்குமார் விஜயை விமர்சித்துள்ளார்.
