பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி என்னை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும் என்று பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி கேள்வி எழுப்பியுள்ளார். பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி இடையேயான மோதல் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ் அந்தப் பதவியை தாமே எடுத்துக் கொள்வதாக அறிவித்திருந்தார். மேலும் பாமக செயல் தலைவராக தன்னுடைய மகள் காந்திமதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால் கட்சிக்கு தலைவர் நான்தான் என்று அறிவித்துக் கொண்ட அன்புமணி தன்னுடைய ஆதரவாளர்களுடன் பனையூரில் தனியாக அலுவலகம் அமைத்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றார். இப்படியான நிலையில் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருவதால் ஜிகே மணி நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பு இன்று அறிவித்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜிகே மணி, என்னை கட்சியிலிருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் கிடையாது. பாமக என்றால் ராமதாஸ் தான் அடையாளம்.
25 ஆண்டுகள் தலைவராக இருந்தேன். மனிதநேயம் உள்ள மனித பண்புள்ள மனிதருக்கு இதுபோன்ற சிந்தனை வருமா. அன்புமணியை கட்சிக்கு கொண்டு வந்ததே நான்தான். பாமகவில் அன்புமணி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் என்னை எப்படி நீக்க முடியும். என்ன அதிகாரமும் ராமதாஸ் இடம்தான் உள்ளது. அன்புமணியை கட்சியை விட்டு ராமதாஸ் நீக்கிவிட்ட நிலையில் பாமகவில் இல்லாத ஒருவர் என்னை எப்படி நீக்க முடியும் என்று ஜி கே மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
