கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்ற கர்நாடகாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவருக்குப் பம்பையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பம்பை நதியில் புனித நீராடிவிட்டு, இருமுடியுடன் சந்நிதானத்தை நோக்கி மலையேறிக் கொண்டிருந்தபோது அவர் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த சக பக்தர்கள் துளியும் தாமதிக்காமல் மனிதாபிமானத்துடன் உடனடியாகச் செயல்பட்டனர்.
அவருக்குச் சில நிமிடங்களிலேயே சி.பி.ஆர் முதலுதவி சிகிச்சையைச் சக பக்தர்கள் வழங்கினர். பக்தர்களின் இந்தச் சாதுர்யமான மற்றும் துரிதமான செயலால் அந்த நபரின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டுப் பம்பையில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சக பக்தர்களின் இந்த மனிதாபிமானச் செயல் மற்றும் அதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
