கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சி சந்திப்பு பகுதியில், கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது நள்ளிரவு நேரத்தில் கும்பல் ஒன்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கார் மற்றும் பைக்குகளில் அதிக சத்தம் எழுப்பியபடி சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களின் சைலன்சர் மற்றும் ஹாரன்கள் மூலம் அவர்கள் எழுப்பிய கடும் இரைச்சல், அந்தப் பகுதியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த மக்களை மிகுந்த அவதிக்குள்ளாக்கியது.
இளைஞர்களின் இந்த அட்டூழியத்தைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால், போதையில் இருந்த இளைஞர்கள் மக்களின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால், பொறுமையிழந்த பொதுமக்கள் கையில் கிடைத்த கம்பிகளைக் கொண்டு அவர்களைத் தாக்கி அங்கிருந்து துரத்தியடித்தனர். பொதுமக்களின் இந்த அதிரடி தாக்குதலால் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அலறியடித்துக் கொண்டு தப்பியோடினர். இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
