தமிழகத்தில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான மூன்றாம் பருவத்திற்கு பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு ஏற்ப அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனை விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்களிடம் அதனை வழங்கும்போது அந்த விவரத்தை வழங்கல் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். வினியோக மையங்களில் இருந்து வழங்கும்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இந்த பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் விபரத்தை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
