திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் மௌனம் காப்பது குறித்து நடிகை கஸ்தூரி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், பனையூரில் இருக்கும் விஜய் ஒரு மனிதாபிமான அறிக்கை கூட வெளியிடாதது மிகப்பெரிய தவறு என கஸ்தூரி சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக அரசியலில் நிலவும் இத்தகைய தீவிரமான சூழலிலும், விஜய் தொடர்ந்து அமைதி காப்பது மன்னிக்க முடியாத குற்றம் என அவர் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழக மக்கள் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ள நிலையில், அவர் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணைப் போல சுயமாகவும், துணிச்சலாகவும் செயல்பட வேண்டும் என கஸ்தூரி முன்பு கருத்துத் தெரிவித்திருந்தார்.
