புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பல மாவட்டங்களை சேர்ந்த யாசகர்கள் யாசகம் பெறுவதற்காக அந்த பகுதியில் தங்கி யாசகம் பெற்று அதில் வரும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அப்படி யாசகம் பெறும் யாசகர்கள் தங்கையிடம் இல்லாமல் கடந்த இரண்டாம் தேதி இரவு பொன்னமராவதி மருத்துவமனை அருகே சாலையோரத்தில் தங்கி இருந்தனர். மீண்டும் காலை எழுந்து பார்த்தபோது அப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த யாசகர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு பிரேத பரிசோதனை முடிந்த பெண்ணின் உடலை போலீசார் அடக்கம் செய்த நிலையில் பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதேசமயம் பிரேத பரிசோதனை முடிவுகளில் உயிரிழந்த பெண் கழுத்தை நிறைத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் திருச்சி மாவட்டம் ஆவூரை சேர்ந்த நூர்ஜகான் என்பதும் அவர் தன்னுடைய குடும்பத்தை பிரிந்து இங்கு யாசகம் கேட்டு வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கில் அதே குழுவில் யாசகம் பெற்று வாழ்ந்து வரும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 61 வயதான சதீஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த நூர்ஜகானை அன்று இரவு சதீஷ்குமார் உடலுறவுக்கு அழைத்ததும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சதீஸ் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
