பெருகிவரும் சைபர் குற்றங்கள் மட்டுமல்லாது, தற்போது மரபுவழித் (Traditional) குற்றங்களிலும் குற்றவாளிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க இணையத்தைப் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், வழக்குகளை விசாரிப்பதிலும் குற்றங்களைக் கண்டறிவதிலும் ஏற்படும் தடைகளைக் களைவதற்கும், டார்க் வெப் (Dark Web) வழியாக நடைபெறும் குற்றங்களைத் தடுப்பதற்கும் சைபர் துறை வல்லுநர்களின் உதவி இன்றியமையாததாக இருக்கிறது.
புலன் விசாரணையில் இருக்கும் சிக்கலான வழக்குகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை (CB-CID), selfe made ninja academy மற்றும் சவீதா பொறியியல் கல்லூரியுடன் இணைந்து தேசிய அளவிலான யுக்தி 2.0 என்ற சைபர் ஹாக்கத்தானை (Cyber Hackathon) நடத்தியது. இந்த ஹாக்கத்தானில் இந்தியா முழுவதிலுமிருந்து 2,400 பேர் பதிவு செய்திருந்தனர். டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல்நிலை போட்டிகளில் அவர்கள் பங்கேற்றனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட முதல் 50 அணிகளைச் சேர்ந்த 178 சைபர் வல்லுநர்கள், டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சவீதா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்டனர்.
