தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியை கைப்பற்ற பல வியூகங்களை வகுத்து வருகிறது. இவர்களுக்கு நடுவே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் மாற்றுக் கட்சியினர் பலரும் முக்கிய கட்சியுடன் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆரம்பம் முதலே தமிழக வெற்றி கழகம் கட்சியை NDA கூட்டணிக்குள் கொண்டுவர இபிஎஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் காய் நகர்த்தினார்கள். இதனிடையே சமீபத்தில் தமாகா உடன் கட்சியை இணைத்த தமிழருவி மணியன், வெளிப்படையாகவே விஜய்க்கு கூட்டணி அழைப்பை விடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த விஜய் NDA கூட்டணிக்கு வரவேண்டும் என்ற அவர், விஜய் தனியாக நின்றால் பலன் இல்லை என்பதை ஒரு தந்தையாக கூறுகிறேன் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இவருடைய இந்த பேச்சை தற்போது அரசியலில் புதிய கவனம் வைத்துள்ளது.
