கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் என்பவர் வளர்க்கும் நாய், வீதியில் சென்ற மற்ற நாய்களைப் பார்த்து குரைத்திருக்கிறது. இந்த சத்தத்தைக் கேட்டு ஆத்திரமடைந்த அவரது பக்கத்து வீட்டுக்காரரும், மண்டல துணை வட்டாட்சியருமான சிலம்பரசன், ஆவேசமாகத் தனது வீட்டிலிருந்து அரிவாளை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.
கொளஞ்சியப்பனின் வீட்டு வாசலில் நின்று கொண்டு, அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை செய்துவிடுவேன் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அரசு அதிகாரி ஒருவர் நடுரோட்டில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட இந்த அதிர்ச்சி காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.
இவர்களிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட கொளஞ்சியப்பன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
