தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் களம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ள காரசாரமான கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 10 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்று ரங்கராஜ் பாண்டே கணித்துள்ளார். ஒருவேளை தவெக 10 தொகுதிகளில் வென்றுவிட்டால், தான் இனிமேல் அரசியலே பேசமாட்டேன் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
மேலும் சுமார் 7.5% வாக்குகளைப் பெற்றாலும், தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு தற்போது ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. அதே சமயம், ஏறத்தாழ அதே வாக்கு சதவீதத்தைக் கொண்டிருந்தாலும், கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 எம்.பி.க்கள் மற்றும் 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தனித்துப் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறுமே தவிர, அது வெற்றியாக மாறாது என்ற தனது அரசியல் பார்வையை இதன் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
