குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில், தனது காதலுக்குத் தடையாக இருந்த தந்தையை 18 வயது கூட நிரம்பாத சிறுமி காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். ஏற்கனவே அந்தச் சிறுமியின் காதலன் ரஞ்சித் என்பவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த இருவரும், தந்தையைத் தீர்த்துக்கட்டப் பலமுறை முயற்சி செய்துள்ளனர்.
உணவில் விஷம் வைப்பது மற்றும் தூக்க மாத்திரை கொடுப்பது போன்ற முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முயற்சியாகத் தந்தைக்குத் தூக்க மாத்திரை கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளனர். நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தந்தையை, சிறுமியின் காதலனும் அவனது நண்பனும் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்ததை அந்தச் சிறுமி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தது விசாரணையில் அம்பலமானது.
காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் தந்தையை அறையில் பூட்டி வைத்த கோபத்தில், அவரைக் கொன்றுவிட்டு ஊரை விட்டு ஓடிவிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போது கொலைக் குற்றத்திற்காக அந்தச் சிறுமி, அவரது காதலன் மற்றும் நண்பர் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
