திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர் குடம் தெருவை சேர்ந்த கணேசன் (56) என்பவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து இறந்ததாக போலீசில் மகன் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்த நிலையில் கணேசனின் குடும்பத்தினர் முன்னுக்குப் பின் முரணாக கூறியதால் அவர்களுடைய நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக இன்சுரன்ஸ் நிறுவனம் போலீசில் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கணேசன் பெயரில் பல உயர் மதிப்புள்ள இன்சூரன்ஸ் இருந்தது தெரிய வந்துள்ளது.
அந்த இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக கணேஷின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் மணவூரை சேர்ந்த பாலாஜி, பிரசாந்த், நவீன் குமார், ராணிப்பேட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தினகரன் ஆகியோருடன் சேர்ந்து தங்களுடைய தந்தையின் கழுத்தில் கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஹரிகரன் மற்றும் மோகன்ராஜ் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற தந்தையையே மகன்கள் பாம்பு கடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
