திருவள்ளூர் மாவட்டம் அனப்பம்பட்டு பகுதியில் உள்ள சீயோன் நர்சரி பள்ளியில், ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்குக் கணக்கு பாடம் சரியாகத் தெரியவில்லை என்ற காரணத்திற்காகப் பள்ளி தாளாளர் அருள்தாஸ் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அவரது தாய் கலைவாணி மகளின் முதுகைப் பார்த்தபோது இரத்தம் கட்டிப் போயிருந்தது தெரியவந்தது.
உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காவல்துறையில் புகாரளித்த நிலையில், தாளாளர் அருள்தாஸ் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டுள்ளார். இருப்பினும், தங்களை மிரட்டிப் புகாரைத் திரும்பப் பெற வைத்ததாகக் கூறி கலைவாணி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளார்.
காவல் துறையினர் வழக்கை முடிக்கத் தங்களை வற்புறுத்தியதாகவும், பாதுகாப்பு கருதி முதலில் புகாரை வாபஸ் பெற்றாலும் தற்போது நீதிக்காகப் போராடுவதாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த தாளாளர் அருள்தாஸ், மாணவியைத் தாக்கியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதாகவும், தற்போது யாரோ தூண்டிவிட்டதால் பெற்றோர் மீண்டும் புகாரளிப்பதாகவும் கூறினார்.
ஆனால், ஒரு சிறுமிக்கு ஏற்பட்ட இத்தகைய காயங்கள் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்கும் இடத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் இத்தகைய வன்முறைகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
