திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த ஜம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (43). கார் ஓட்டுநரான இவருக்கும், மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த துர்கா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததால், துர்கா தனது கணவரைப் பிரிந்து தாய் வீட்டிற்குச் சென்று தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், பச்சையப்பன் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியைப் பார்ப்பதற்காகக் குடிபோதையில் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த துர்கா, பச்சையப்பனின் கழுத்தில் துண்டைச் சுற்றி, அவரை வீட்டுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து தள்ளியுள்ளார். இதில் கழுத்து நெரிக்கப்பட்ட பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, துர்கா காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பச்சையப்பனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
