“ப்ளீஸ் என் கணவரை காப்பாத்துங்க…” நடுரோட்டில் கெஞ்சிய மனைவி… கண்டுக்காமல் போன வாகன ஓட்டிகள்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

By Devi Ramu on மார்கழி 17, 2025

Spread the love

பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்த வெங்கடரமணன் (34) என்ற இளைஞர், உரிய நேரத்தில் மருத்துவ உதவியும் மனிதநேயமும் கிடைக்காததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரது மனைவி அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பல மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கியுள்ளார்.

முதலுதவி அளிக்கவோ அல்லது ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவோ தனியார் மருத்துவமனைகள் முன்வராத நிலையில், மீண்டும் பைக்கிலேயே மற்றொரு மருத்துவமனைக்குச் செல்லும்போது அவர்கள் விபத்தைச் சந்தித்தனர். விபத்தில் அடிபட்டு துடித்த கணவரைக் காப்பாற்றச் சாலையில் சென்றவர்களிடம் அந்தப் பெண் கதறி அழுதும், பல வாகனங்கள் நிற்காமல் சென்றது மனிதநேயமற்ற செயலாக அமைந்தது.

   

நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு டாக்ஸி ஓட்டுநர் உதவியுடன் மருத்துவமனைக்குச் சென்றும், சிகிச்சை பலனின்றி வெங்கடரமணன் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞருக்கு ஐந்து வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

   

இக்கட்டான சூழலில் சக மனிதர்கள் கைவிட்ட போதிலும், அந்த குடும்பத்தினர் வெங்கடரமணனின் கண்களைத் தானமாக வழங்கி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளனர். முறையான அவசரச் சிகிச்சை வசதிகள் இல்லாததும், மக்களின் அலட்சியமும் ஒரு இளம் உயிரைப் பறித்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.