உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில், 10-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த ரஞ்சித் பால் (22) என்ற இளைஞரைத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அலைபேசி வாயிலாக ஏற்பட்ட பழக்கத்தைப் பயன்படுத்தி, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவியை ரஞ்சித் கடத்திச் சென்றுள்ளார்.
மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், இரண்டு வாரங்களுக்குப் பிறகு மாணவியை மீட்டனர். விசாரணையில், ரஞ்சித் அந்தச் சிறுமியை ரகசிய இடத்தில் அடைத்து வைத்துத் தொடர்ந்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது அம்பலமானது.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளி ரஞ்சித் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்கள் மற்றும் அலைபேசி தொடர்புகள் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
