தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அதிமுக-தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு அளித்த மழுப்பலான பதில் அரசியல் களத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சூசகமான பதிலளித்துள்ளார். “தேர்தல் களம் எப்படி மாறும் என்பதை இப்போதே கணிக்க முடியாது; பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து கட்சித் தலைவர் விஜய் மட்டுமே முடிவெடுப்பார் என்று ஏற்கனவே கூறிவந்த செங்கோட்டையன், தற்போது “யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது” எனத் தனது நிலைப்பாட்டை மென்மையாக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான புதிய அரசியல் சமன்பாடுகளுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
