தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் விட்டதை பிடிக்க ஈபிஎஸ் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் பலரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று குரல் எழுப்பி வருவதால் அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் இ.பி.எஸ் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி முன்னாள் நகர் மன்ற தலைவர் பரிதா நவாப் திமுகவிலிருந்து விலகியுள்ளார். சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுகவினரே அவரை தோற்கடித்ததால் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில் திமுகவிலிருந்து விலகிய அவர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கருணாநிதி காலத்தில் இருந்து திமுகவில் இருக்கும் அவர் விலகியது ஸ்டாலினுக்கு தற்போது அதிர்ச்சி அளித்துள்ளது.
