உடல் பருமன் குறைப்பு மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக உலகளவில் அறியப்பட்ட ‘ஓசெம்பிக்’ (Ozempic) மருந்தை, டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நார்டிஸ்க் நிறுவனம் டிசம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. செமகுளுடைட் என்ற இந்த மருந்தானது, ஆரம்பத்தில் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைச் சீராக்க ஊசி வடிவில் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது இது உடல் எடை குறைப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருந்தானது வாரம் ஒருமுறை வயிறு, மேல் கை அல்லது தொடை பகுதிகளில் உள்ள தோலின் வழியே செலுத்தப்படுகிறது. இது உடலில் இயற்கையான இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், பசி நிறைந்த உணர்வை அளித்து செரிமானத்தை மெதுவாக்கவும் உதவுகிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதுடன், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அபாயங்களைக் குறைக்கவும் உதவும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவில் இதன் விலை, 0.25mg டோஸ் ரூ. 2,200 என்றும், 1mg டோஸ் ரூ. 2,793.75 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஊசி எல்லா நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, டைப் 1 நீரிழிவு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோர் போன்ற சில பிரிவினருக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை. எனவே, மருத்துவ ஆலோசனையின்றி யாரும் இதைச் சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
