திருப்பத்தூர் மாவட்டம், தோக்கியம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மதி என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தும், அவர் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுப் பெண்ணுடன் அவருக்குப் பத்து ஆண்டுகளாக நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது திருமணத்தை மீறிய ரகசிய உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக அந்தப் பெண் மதியிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதி, அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார்.
“நீ என்னுடன் பேச மறுத்தால், நாம் தனிமையில் ஒன்றாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விடுவேன்” என்று மதி மிரட்டியதாகத் தெரிகிறது. மேலும், கொலை செய்து விடுவதாகக் கத்தியுடன் அப்பகுதியில் சுற்றியதாகவும் கூறப்படுகிறது.
மதியால் மனமுடைந்த அந்தப் பெண், இந்த மிரட்டல்கள் குறித்து கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மதியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
