தேமுதிக இளைஞர் அணியின் செயலாளர் விஜயபிரபாகரனின் 34 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, விமான சிக்கலால் விஜய பிரபாகரன் மும்பையிலிருந்து இன்னும் சென்னை வந்து சேரவில்லை என்று தெரிவித்தார். விரைவில் வந்து விடுவார் என்ற பிரேமலதா டிசம்பர் 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்தின் குருபூஜை நடைபெற உள்ளதாகவும் ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெற இருக்கும் மாநாடுகள் தான் கட்சியின் அடுத்த இலக்கு என்றும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.
இந்த மாநாட்டில் கட்சியின் கூட்டணி குறித்த நல்ல அறிவிப்பு நிச்சயம் வெளியிடப்படும் என்று பிரேமலதா உறுதியளித்தார். மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள கட்சிகள் அனைத்தும் தேமுதிகவுக்கு தோழமை தான் என்றாலும் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார். தேர்தலுக்காக கடந்த ஒரு வருடமாக கழக நிர்வாகிகள் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் தமிழக முழுவதும் உள்ள 68,000 பூத்களிலும் பூத் கமிட்டிகள் அமைத்து தயாராக இருப்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளும் தங்கள் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பிரேமலதா விஜயகாந்த் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
