தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இன்று (டிசம்பர் 12) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது குறித்துப் பேசுகையில், “திமுக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கான பணியாளர் தேர்வில் பல்வேறு குளறுபடிகளைச் செய்துள்ளது.
குறிப்பாக, நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வுப் பட்டியலில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதிக மதிப்பெண்கள் பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் திட்டமிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாறாக, குறைந்த மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது தகுதியுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். எனவே, தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலை உடனடியாக ரத்து செய்துவிட்டு, மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்களைக் கொண்டு புதிய பட்டியலை வெளியிட்டு, நேர்மையான முறையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்” என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
