தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் ஆறாவது தெருவை சேர்ந்த லட்சுமி (65) என்பவர் கடந்த ஒன்பதாம் தேதி ஜோதி நகர் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது தங்க சங்கிலி, இரண்டு தங்க வளையல்கள் உட்பட மொத்தம் ஐந்து சவரன் நகைகளை ஒரு பையில் வைத்து கையில் எடுத்துச் சென்றுள்ளார். ரேஷன் கடையில் பொருள்களை வாங்கும் போது நகைகள் வைத்திருந்த பை அவருடைய கவனக்குறைவால் கீழே விழுந்து உள்ளது. அதனை கவனிக்காமல் அவரும் வீடு திரும்பிய நிலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தன்னுடைய பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து பல இடங்களில் தேடியுள்ளார். எங்கும் கிடைக்காததால் உடனே அவர் போலீசில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து ரேஷன் கடைக்கு சென்று போலீசார் விசாரித்த போது ஊழியர் சீனி பாண்டியன் (55) ரேஷன் கடையை மாலை பூட்டும் நேரத்தில் மேஜைக்கு கீழே கிடந்த பையை எடுத்துப் பார்த்தபோது அதில் நகைகளை இருப்பதைக் கண்டு உரிமையாளர் தேடி வந்தால் கொடுக்கலாம் என்று பாதுகாப்பாக கடையிலேயே வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பிறகு அவரிடம் இருந்து நகை மீட்கப்பட்டு உரிய பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. கடையில் தவறிய நகைகளை எந்தவித லாபத்தையும் நாடாமல் திருப்பிக் கொடுத்த ரேஷன் கடை ஊழியரின் நேர்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
