கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்திய வருகை, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த ஆர்வத்தை அவரது சுற்றுப்பயண ஒருங்கிணைப்பாளர்கள் வணிக ரீதியாக மாற்றியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வரும் 13-ம் தேதி ஹைதராபாத் செல்லவுள்ள மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், ஒரு புகைப்படத்திற்கு ₹9.95 லட்சம் (கிட்டத்தட்ட பத்து லட்சம் ரூபாய்) கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி வெளியானதில் இருந்து, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. “விளையாட்டு வீரரின் புகழைப் பயன்படுத்தி நடத்தப்படும் இத்தகைய பெரும் கட்டண வசூல் அதிர்ச்சியளிக்கிறது” என்றும், “இது ரசிகர்களின் உணர்வுகளை வணிகமாக்கும் செயல்” என்றும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
