மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள காசா காவல் நிலையத்தில் பணியாற்றும் 40 வயது காவலர் ஒருவர், வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5-ம் தேதி, ஒரு வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அந்தப் பெண் காசா காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, காவல் நிலைய பொறுப்பாளராக இருந்த அந்த காவலர், அந்தப் பெண்ணை மிரட்டி, தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட காவலர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய இடத்திலேயே இத்தகைய கொடூரமான சம்பவம் நிகழ்ந்திருப்பது, காவல்துறையின் நம்பகத்தன்மை மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
