ஹாட் ஸ்டார் தளத்தில் ஏற்கனவே பிக்பாஸ், விஜய் டிவி சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் தென்னிந்திய மொழிகளில் மொத்தம் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்களை தயாரித்து வருவதாக ஹாட் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தமிழில் மட்டும் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழக அரசுடன் ஹாட் ஸ்டார் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது.
அதனால் தமிழில் ஏராளமான புதிய நிகழ்ச்சிகள், படங்கள் மற்றும் தொடர்கள் ஹாட் ஸ்டாரில் தொடர்ந்து வர இருக்கின்றன. நேற்று நடந்த ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பாண்டு நிகழ்ச்சியில் இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கமல்ஹாசன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிக்பாஸ் தெலுங்கு ஷோ தொகுப்பாளர் நாகார்ஜூனா, மலையாளத்தில் பிக்பாஸ் நடத்தி வரும் மோகன்லால் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக இதில் கலந்துக்கொண்டனர்.
