எச். ராஜா மீது மூன்று பிரிவுகளின் கீழ் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் மத கலவரத்தை தூண்டும் விதமாக பேசுதல், அரசு ஊழியருக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளின் கீழ் எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு கடந்த வாரம் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா காரில் சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூர் அருகே போடி சூப்பர் அண்ட் செல்வகுமார் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு இருப்பதால் அங்கு செல்ல அனுமதி கிடையாது என்று கூறி அவரை போலீசார் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
ஆனால் ராஜா வாகனத்தில் ஏற மறுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது தன்னை போலீஸ் வாகனத்தில் ஏற்றுவதற்காக உரிய காரணத்தை எழுத்துப்பூர்வமாக தருமாறு கூறினார். அவருக்கு ஆதரவாக ஏராளமான பாஜகவினர் அங்கு குவிந்தனர். அப்போது ராஜாவை அவருடைய காரிலேயே அமர போலீசார் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் மதுரைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. பிறகு திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கியதாக தகவல் வந்ததை தொடர்ந்து அவரை திருப்பரங்குன்றம் செல்ல போலீசார் அனுமதித்தனர். இப்படியான நிலையில் எச். ராஜா மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பு கிளப்பி உள்ளது.
