தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக அதிமுகவில் பிரிவினை பஞ்சாயத்து குறித்த செய்தி தான் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகவே உள்ளது. இது மேலும் வலுப்பெற்று அதிமுகவின் மூத்த அமைச்சராக இருந்த செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்த நிலையில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அதிமுக தலைமைக்கு எதிராக இருப்பவர்களுடன் ஒன்று சேர்ந்ததால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் திடீரென விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார்.
செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். ஒரு பக்கம் விஜயின் பரப்புரை வேகம் எடுக்க ஆரம்பித்து உள்ள நிலையில் மறுபுறம் செங்கோட்டையன் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். இந்நிலையில் அதிமுக சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் என் என் சிவராஜ் உட்பட 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தனர். மேலும் செங்கோட்டையன் கை நீட்டும் நபருக்கு தான் எங்கள் ஓட்டு என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது ஈபிஎஸ்-க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
