கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கரியப்பா மடிவாளா (26) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கவிதா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயக்கப்பட்டது. இவர்களின் திருமணம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற இருந்தது. அதே நேரத்தில் கரியப்பாவின் அண்ணன் ரமேஷுக்கும் அதே நாளில் திருமணம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்ததால் கரியப்பா மற்றும் கவிதா ஆகியோர் திருமணத்திற்கு முந்தைய போட்டோ சூட் நடத்த முடிவு செய்தனர்.
ஏனென்றால் கூட்டு திருமணம் என்பதால் அதற்கு முன்பே பல்வேறு இடங்களுக்கு சென்று போட்டோ சூட் நடத்தி விடலாம் என்று அந்த ஜோடி முடிவு செய்தனர். இதற்கு இரண்டு பேரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்த நிலையில் நேற்று முன்தினம் பல பகுதிகளுக்குச் சென்று மோட்டார் சைக்கிளில் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நீண்ட நேரம் நீடிக்க வில்லை. போட்டோஷூட் எடுத்து முடித்ததும் வருங்கால மனைவியை அவருடைய வீட்டில் கொண்டு போய் விடுவதற்கு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கரியப்பா அழைத்துச் சென்றார். நேற்று முன்தினம் இரவு இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் பழுதாகி ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.
அதை எடுத்து மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் ஒட்டியபடி கரியப்பா வந்தார். அந்த சந்தர்ப்பத்தில் எதிரே வந்த மற்றொரு லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதில் மோட்டார் சைக்கிள் இருந்து கரியப்பாவும் கவிதாவும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கரியப்பாவின் உயிரும் பிரிந்தது. இதனை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுகினர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இல்லற வாழ்க்கையில் இணைய பல்வேறு கனவுகளுடன் போட்டோ சூட் நடத்தி முடித்த மணமக்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
