ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். சமீபத்தில், கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதனால், ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில், அதிமுக தலைமை கே.கே.செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையின்போது, செங்கோட்டையனுக்குக் கட்சியில் வழங்கப்பட்ட முக்கியத்துவம் அனைத்தும் கே.கே.செல்வத்துக்கும் வழங்கப்படும் என்று அதிமுக தலைமை உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கே.கே.செல்வம் முறைப்படி மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த அரசியல் நகர்வு ஈரோடு மாவட்ட அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
