இன்றைய காலகட்டத்தில் தற்கொலை என்பது ஒரு சாதாரணமான விஷயமாகிவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து தான் வருகின்றன. ஒரு சிறிய விஷயத்திற்கு கூட தயங்காமலும் குடும்பத்தை பற்றி யோசிக்காமலும் மரணத்தை நாடுகிறார்கள். இதனால் கஷ்டப்பட போவது குடும்பத்தினர் மட்டும்தான். அப்படி ஒரு துயர சம்பவம் தான் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் கோபாலில் 27 வயதான அக்கவுண்டண்டாக பணியாற்றி வந்த சுஜாதா என்ற பெண் தான் இத்தகைய முடிவை எடுத்துள்ளார். அவரது பிறந்த நாளான அன்று இரவு 10 மணியளவில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
தங்கள் மகளின் அறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறகு தகவல் அறிந்து வந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் உடலின் அருகே இருந்து ஒரு தற்கொலை குறிப்பு கடிதம் மீட்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் சுஜாதா, இனிமேல் இந்த நிலையை தாங்க முடியாது. என் நோயின் குறிப்பிட்ட தன்மை இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அப்பா என்ன மன்னித்து விடுங்கள். இனிமேல் என்னால் தாங்க முடியாது. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, நான் மட்டுமே பொறுப்பு என்று அவர் எழுதிவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது. தற்போது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
