இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்து வேலைகளுமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைந்த காலம் போய் தற்போது இருந்த இடத்திலிருந்து கொண்டே எளிதில் வேலையை முடிக்கும் வகையில் ஆன்லைனில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது. அதன்படி தற்போது தமிழகத்தில் ஆண்டுதோறும் 36 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதில் 5.5 லட்சம் உரிமை பத்திர வைப்பு எனப்படும் கடனுக்கான பிணையம் மற்றும் 3.5 லட்சம் ரசீது பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் சொத்துக்கள் ஆன்லைன் மூலம் பதியும் வகையில் தமிழக பதிவுத்துறை புதிய நடவடிக்கையை கொண்டு வரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வீட்டிலிருந்தபடியே பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஸ்டார் 3.0 என்ற திட்டம் மூலம் சொத்துக்களை வாங்குவது, விற்பது மற்றும் திருமண பதிவு உள்ளிட்ட பணிகளை வெறும் பத்து நிமிடங்களில் வீட்டிலிருந்து செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கான பிரத்தியேக சாஃப்ட்வேரில் விவரங்களை பதிவு செய்து பத்திரங்களை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
