சலூன் கடைகளை போல இனி மதுக்கடைகளிலும் இங்கு அரசியல் பேசக் கூடாது என எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்துகிறது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். வயது 48. கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் மயங்கி கிடந்த வின்சென்டை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வின்சென்ட் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் மருத்துவ பரிசோதனையில் வின்சென்ட் உடலில் வயிறு மற்றும் இருதய பகுதியில் பலமாக தாக்கியதற்கான காயங்கள் இருந்தது தெரியவந்தது. அவரை யாரேனும் பலமாக தாக்கி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். போலீஸ் நடத்திய விசாரணையில் ஒற்றாமரம் பகுதியில் உள்ள மதுக்கடையில் வின்சென்ட் மது அருந்திஎள்ளார். அப்போது அவருக்கும் மற்றொரு தரப்புக்கும் அரசியல் ரீதியான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் ஏற்பட்ட தகராறில் அந்த கும்பல் வின்சென்டை கடுமையாக தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. மதுக்கடையில் வின்சென்ட் பாஜக கட்சிக்கு ஆதரவாக பேசியதாகவும் மற்றொரு தரப்பினர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசியதாகவும் அதில் ஏற்பட்ட தகராறில் வின்சென்டை அவர்கள் தாக்கியதும் உறுதியானது. இந்த விவகாரத்தில் மினி பஸ் டிரைவர் டோமினிக் லால், லாரி டிரைவர் சிஜின் என்கிற வினோ ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
