நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜனநாயகன். இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. அரசியல் களத்தில் பரபரப்பாக உள்ள நடிகர் விஜய் ஜனநாயகன் படத்துடன் சினிமாவை விட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் இதுதான் அவரது கடைசி படமாக இருக்கும். இந்த படத்தில் விஜய் நடிக்க 275 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. தென்னிந்திய நட்சத்திர நடிகர்களில் அதிக சம்பளம் பெறுவது விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஜய் அவர் அறிமுகமான முதல் படத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதன்படி அவர் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்ற படத்தில் நடித்து சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். கடந்த 1992ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. ஆனால் அதற்கு முன்பே எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்திருக்கிறார். அப்போது வெற்றி என்ற படத்தில் நடித்த விஜய்க்கு அவரது தந்தையும் அந்த படத்தின் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் 500 ரூபாய் சம்பளமாக வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
