பிரபல சினிமா தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக 86 வயதான நிலையில் சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு நேரில் வந்த நடிகர் ரஜினிகாந்த், சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறியதாவது, சரவணன் மிகப்பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்றால் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சரவணன் தான். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர்.
பத்து நிமிடங்கள் அவருடன் பேசினால் அதில் அப்பச்சி அப்பச்சி என்று அவருடைய தந்தையை தான் அவர் நினைவுபடுத்தி பேசுவார். என் மீது நிறைய அன்பு வைத்திருந்தார். என்னுடைய நலம் விரும்பி. எனது கஷ்ட காலங்களில் எல்லாம் எனக்கு துணை நின்றவர். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் நான் 9 படங்களில் நடித்துள்ளேன். அந்த 9 படங்களும் பெரிய ஹிட் படங்களாக இருந்தன. கடந்த 1980களில் ஏவிஎம் தயாரிப்பில் வெளியான முரட்டுக்காளை படம் தமிழகத்தில் மிகப் பிரமாண்டமான வசூலை குவித்தது.
கடந்த 2000ம் ஆண்டில் நான் நடித்து வெளிவந்த சிவாஜி படம் மிகப்பெரிய பிரமாண்டமான படமாக இருந்தது. 2020களில் மிகப் பிரமாண்டமான ஒரு படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் சரவணன் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. அவருடைய மறைவு என் மனதை மிகவும் பாதிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக கூறியிருக்கிறார்.
