தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திமுக அடுத்த முறையும் ஆட்சியில் அமர வேண்டும் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றது. கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த 2021 தேர்தலில் தோல்வி அடைந்த தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்று திமுகவின் முக்கிய அமைச்சர்களை நியமித்து அதனை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் களமிறங்கியுள்ளார். மேலும் கூட்டணி கட்சிகளிடமும் தொகுதி பங்கீடு குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் கூட்டணி கட்சிகள் புதிய புதிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருவது ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.
அதன்படி முதன் முதலில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என்ற வாதத்தை முன் வைத்தது. பீகார் தேர்தலில் தோல்வியை தழுவிய காங்கிரஸ் தமிழக தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக ஸ்டாலின் இடம் பேச காங்கிரஸ் தலைமை ஐந்து பேர் கொண்ட குழுக்களை அமைத்துள்ளது. இவர்கள் நேற்று ஸ்டாலினை சந்தித்து பேசுகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவியும் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென நிபந்தனை விதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவியை ஏன் வழங்கக்கூடாது என்று குரல் ஓங்கிவரும் நிலையில் தற்போது காங்கிரசில் இந்த கோரிக்கை ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
