தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் பாமகவில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தந்தைக்கு மகனுக்கும் ஏற்பட்ட தலைமை போட்டியால் பாமக தற்போது இரண்டாக பிரிந்து கிடக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும் இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடுநிலையில் இருக்கும் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். இந்த சண்டை தற்போது உச்சத்தை எட்டிய நிலையில் இருவரும் மாறி மாறி அவர்களை எதிர்ப்பவர்களை கட்சியிலிருந்து தொடர்ந்து நீக்கி வந்தனர். இப்படியான நிலையில் கட்சியை நிறுவனர் ராமதாஸ் இனி அன்புமணிக்கு கட்சியில் இடம் இல்லை, வேண்டுமென்றால் தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும் என்று கூறி பரப்பரப்பை கிளப்பி இருந்தார்.
இந்நிலையில் அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்ட நிலையில் அன்புமணி வசம் சென்ற பாமகவை மீட்பதற்காக ஜி கே மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். நீதிமன்றங்களில் சட்டப் போராட்டங்களை நடத்தும் பணியை இந்த குழு மேற்கொள்ளும் என்று கூறிய ராமதாஸ், கட்சி தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம், கட்சி மற்றும் தேர்தல் பணியை தீவிர படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
