ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய டிட்வா புயல், சென்னைக்கு 50 கி.மீ. தொலைவிலேயே நிலைகொண்டுள்ளது. சென்னைக்கு அருகே நகராமல் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை , செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. தற்போது சென்னையில் மீண்டும் கன மழை வெளுக்க தொடங்கியுள்ளது. பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் ஆறு போல வெள்ள நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேசமயம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
