“அந்த ஜாதிகாரிய எதுக்குடா கல்யாணம் பண்ண”… மணக்கோலத்தில் இருந்த மகனை அடித்து உதைத்த தாய்… திருத்தணி கோவிலில் பரபரப்பு…!

By Nanthini on மார்கழி 1, 2025

Spread the love

கும்பகோணத்தை சேர்ந்த 31 வயது இளம் பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் தற்போது வசித்து வருகின்றார். இவர் அரக்கோணம் பகுதியை சேர்ந்த வாலிபரை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நேற்று அரக்கோணத்தில் பெண் வீட்டார் சம்மதத்துடன் தன்னுடைய காதலியை அந்த வாலிபர் திருமணம் செய்து கொண்டார். பிறகு புதுமண தம்பதிகள் மணக்கோளத்தில் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மணப்பெண்ணின் உறவினர்களுடன் வந்தனர்.

மலைக்கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு வாகன நிறுத்துமிடத்திற்கு புதுமண தம்பதிகள் வந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தன்னுடைய உறவினருடன் அங்கு வந்த வாலிபரின் தாயார் தனது எதிர்ப்பையும் மீறி காதலியை திருமணம் செய்து கொண்ட மகனை, மணப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் கண் முன்னே சரமாரியாக தாக்கினார். இதனைப் பார்த்த வாலிபரின் மனைவி மற்றும் உறவினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுதபடி நின்றனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் இதனை வேடிக்கை பார்த்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் இந்த சம்பவத்தால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.