தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த செங்கோட்டையனை கண்டித்து மானாமதுரையில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை செங்கோட்டையன் பயன்படுத்தக் கூடாது என்று அதிமுகவினர் எச்சரித்துள்ளனர். அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொடிபிடித்ததை தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதாவின் பிரச்சாரப் பயண சாரதி என குறிப்பிடப்படும் செங்கோட்டையன் தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சிகள் இணைந்த பிறகும் ஜெயலலிதா படத்தை சட்டை பையில் வைத்திருப்பதுடன் தன்னுடைய அலுவலக பெயர் பலகையிலும் வைத்துள்ளார்.
இதனை அதிமுகவினர் எதிர்த்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளன. சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் செங்கோட்டையன் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிமுகவே வேண்டாம் என்ற பிறகு ஜெயலலிதா எம்ஜிஆர் படங்களை சூடு சொரணை இருந்தால் பயன்படுத்தக்கூடாது என எச்சரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். சிவகங்கை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரான மணிமாறன் என்பவர் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
