தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை (SIR) குறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்தத் திருத்தப் பணியில் 6.41 கோடி வாக்காளர்களில், இதுவரை 6.23 கோடி வாக்காளர்களுக்குக் கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல், பூர்த்தி செய்த படிவங்களை டிசம்பர் 4-க்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் அல்லது உதவி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
முக்கியமாக, 2002 அல்லது 2005ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரையோ அல்லது உறவினர் பெயரையோ கண்டறிய முடியாதவர்கள், மற்ற விவரங்களை நிரப்பி டிசம்பர் 4-க்குள் படிவத்தைச் சமர்ப்பித்தால், அவர்களின் பெயர் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். தவறினால், அவர்களின் பெயர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெறாது. மேலும், மூன்று முறை வீடு தேடிச் சென்றும் படிவம் வழங்க முடியாதவர்களின் பெயர்களும் வரைவுப் பட்டியலில் இடம்பெறாது.
வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள், டிசம்பர் 9ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் உரிமைக்கோரல் மற்றும் மறுப்புரை காலத்தில், படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தைச் சேர்த்துப் புதியதாக விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 7, 2026 அன்று அனைத்துப் பரிசீலனைகளுக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
