சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்க கோரி அம்பத்தூரில் கடந்த 9 நாட்களாக பெண் தூய்மை பணியாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக வெற்றி கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா அவர்களும் போராடும் மக்களை நேரில் சந்தித்து பேசினார்கள். பிறகு பெண் தூய்மை பணியாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர். தூய்மை பணியாளர்களிடம் குழந்தைகளின் விவரங்களை கேட்டு அறிந்து அவர்களின் கல்விக்கான உதவிகளை செய்வதாக உறுதியளித்தனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்காக உழைப்போர் உரிமை இயக்கத்தினர் பாதுகாப்பிற்காக உயர் நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை முதல்வர் மற்றும் துணை முதல்வர், சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட யாரும் நேரில் வந்து பார்க்கவில்லை. தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் இயக்கங்கள் தேர்தல் கூட்டணிகளை தூக்கிப்போட்டு தூய்மை பணியாளர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் குழந்தைகளின் கல்வி கட்டணம் குறித்து கேட்டு வருகிறோம். விவரம் கிடைத்ததும் அவர்களுக்கு உதவி செய்யப்படும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
