தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வர மறுபக்கம் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் நடத்தி வருகிறது. மூன்றாம் நிலை கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கு இந்த தேர்தலில் அதனை எதிர்க்கட்சியாக கூட வரவிடாது என்ற கருத்து தான் தற்போது நிலவுகிறது. அதிமுகவிலிருந்து இபிஎஸ் மூலம் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் சசிகலா ஆகியோர் நால்வர் அணியாக உருவெடுத்து உள்ளது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஐ மீண்டும் இணைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஈபிஎஸ், காலம் முடிந்துவிட்டது என்று பதிலளித்தார். அதிமுக அணிகள் இணைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக நேற்று ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் தற்போது இபிஎஸ் இவ்வாறு பதிலளித்து உள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
