சிவகங்கை மாவட்டம், வேளாரேந்தல் விளக்குப் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தவர் சற்குணம் (41). இவர் தினமும் இரவில் மறவமங்கலம் கிராமத்திற்குச் சென்று கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிட்டுத் தனது இருசக்கர வாகனத்தில் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
நேற்று இரவு வழக்கம்போல் பொருட்களை வாங்கிவிட்டு, வேளாரேந்தல் விளக்கு அருகே உள்ள சந்தைக்கடைப் பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அரிவாளால் அவரை வெட்ட முயன்றுள்ளனர். இதைப் பார்த்த சற்குணம் சுதாரித்துக்கொண்டு தனது வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓட முயன்றார்
ஆனால், அந்த நபர்கள் துரத்திச் சென்று, வயல்வெளிக்குள் வைத்து சற்குணத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடினர். நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பாத சற்குணத்தை அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், நிலத்தில் கிடந்த அவரது சடலத்தைப் பார்த்த மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காளையார்கோவில் காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றிச் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சற்குணம் எதற்காகக் கொலை செய்யப்பட்டார், கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
