ஈரோடு மாவட்டம், பவானி மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தையை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் துரிதமாகச் செயல்பட்ட பவானி போலீசார், சைல்டு லைன் அதிகாரிகளுடன் இணைந்து அந்த வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில், அங்குப் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த வீட்டில் வசித்து வந்த 21 வயது பிரவீன் என்பவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மும்பையில் பிறந்த அந்தக் குழந்தையை இரண்டு பெண்கள் பவானிக்குக் கொண்டு வந்து, விற்பனைக்காகப் பிரவீனிடம் ஒப்படைத்தது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் குழந்தையைக் கடத்தி வந்தார்களா அல்லது பெற்றோரைச் சம்மதிக்க வைத்துப் பணத்துக்கு வாங்கினார்களா என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட அந்தக் குழந்தை அருகில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிரவீன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மேலும், குழந்தையைக் கொண்டு வந்த இரண்டு பெண்களைப் பிடிக்க, பவானி போலீஸ் அதிகாரிகள் தனிப்படை அமைத்துத் தற்போது மும்பைக்கு விரைந்துள்ளனர். ஏற்கனவே இப்பகுதியில் இது போன்ற குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதால், இது ஒரு பெரிய கும்பலின் செயலாக இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
