இனிமே நான் உயிரோட இருக்க மாட்டேன்… “வீட்டிலிருந்தே வேலை, ஆன்லைனில் வந்த விளம்பரம்”… ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண்… இறுதியில் நடந்த பயங்கரம்..!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள விருப்பாச்சி என்ற கிராமத்தை சேர்ந்த சிவசக்தி என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு லாவண்யா (25) என்ற மனைவி உள்ள நிலையில் கோவையை சேர்ந்த லாவண்யா கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிவ சக்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சத்திரப்பட்டியை அடுத்த கோபாலபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு நான்கு வயதில் ஒரு மகனும் இரண்டு வயதில் ஒரு மகளும் உள்ளன.

இதனிடையே லாவண்யா வீட்டில் இருந்தபடியே அஞ்சல் வழி கல்வி மூலம் பட்டம் மேற்படிப்பு படித்து வந்துள்ளார். அதேசமயம் வேலைக்கும் முயற்சி செய்து உள்ளார். அப்போது அவர் சமூக வலைத்தளத்தில் வந்த வேலை வாய்ப்பு விளம்பரங்களை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு உள்ளார். அதில் பேசிய மர்ம நபர்கள், வேலைக்கு சேர பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய லாவண்யா அவர்களுக்கு பல தவணைகளாக 5 லட்சம் ரூபாய் வரை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளார்.

   

இருந்தாலும் வேலை கிடைக்கவில்லை. மேலும் ஆன்லைன் மர்ம நபர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போது முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லாவண்யா சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சிவசக்தி வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டதும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த லாவண்யா திடீரென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். குழந்தைகளின் அழுகை கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்ற ஜன்னல் வழியாக பார்த்ததும் லாவண்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

   

உடனடியாக சிவசக்திக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து லாவண்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே தகவல் அறிந்து வந்த போலீசார் லாவண்யா உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.