கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல்லைச் சேர்ந்த பிஜிலிகர் (44) என்பவர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் குளச்சல் பணிமனையில் நடத்துனராகப் பணியாற்றி வருகிறார். நவம்பர் 15ஆம் தேதி இரவு, இவர் பணியிலிருந்த பேருந்தில், குறும்பனையைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளியான ராஜன் (56) மதுபோதையில் ஏறியுள்ளார். நடத்துனர் பிஜிலிகர் டிக்கெட் எடுக்கச் சொன்னபோது ராஜன் மறுத்து, நடத்துனரின் சட்டையைப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
குளச்சல் அரசு மருத்துவமனை அருகில் பேருந்து சென்றபோது, ஆத்திரமடைந்த ராஜன் திடீரென நடத்துனர் பிஜிலிகரை காலால் எட்டி உதைத்து, படிக்கட்டு வழியாகச் சாலையிலேயே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் சாலையில் விழுந்த கண்டக்டரை ராஜன் தொடர்ந்து தாக்கியுள்ளார். பயந்துபோன பிஜிலிகர் எழுந்து மருத்துவமனையை நோக்கி ஓட, ராஜன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து துரத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பிஜிலிகர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு, ராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டனர். நடத்துனர் அளித்த புகாரின் அடிப்படையில், குளச்சல் போலீசார், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ராஜனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
